தீபத்திருவிழாவை முன்னிட்டு விராலிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
விராலிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
விராலிமலை:
முருகன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் வழிபாட்டுத்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு முருகன் வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாடசொல்லி அதன்படி அருணகிரிநாதர் முருகனைப்பற்றி பாடியதாகவும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த தலமாகவும் விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
இச்சிறப்புபெற்ற விராலிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் கார்த்திகையை முன்னிட்டு காலையில் மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மலைமேல் உள்ள தீப கோபுரத்தில் நெய் ஊற்றி 6.05 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாந்தநாத சாமி கோவில்
புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவில், பிரகதாம்பாள் கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டன. பூங்காநகரில் உள்ள மகாசக்தி அம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்துதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதேபோல நகரப்பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி வீடுகளில் பொதுமக்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். மேலும் பலர் கம்பி மத்தாப்பூ, புஸ்வானம் கொளுத்தி கொண்டாடினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளான வலையப்பட்டி மலையாண்டி கோவில், நகர சிவன் கோவில், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவில், தேனிமலை முருகன் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில், திருக்களம்பூர் ஸ்ரீகதலி வனேஸ்வரர் கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பின்பு கோவில் வளாகத்திலும் பொதுமக்கள் அவரவர் இல்லங்கள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்பு கோவில் எதிரே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி கோட்டை விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விசுவநாதர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ்கார்த்திகை தீபம் நாளை முன்னிட்டு சுப்பிரமணிய சாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.
மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலை பவுர்ணமி கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றிகூட்டு பிரார்த்தனையுடன் விழாவை துவக்கிவைத்தார். அதனை தொடர்ந்து தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் திரளானோர் தீபங்களை வணங்கி சுற்றிவந்து சபைக்கரசரிடம் ஆசி பெற்றனர். இந்த தீப விழாவானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் திரளான மெய்வழிச்சாலையினர் கலந்து கொண்டனர்.
வடகாடு, திருவரங்குளம், ஆதனக்கோட்டை
வடகாடு பகுதிகளில் கடைத்தெரு மற்றும் வீடு, கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
திருவரங்குளத்தில் சிவன் கோவிலில் உள்ளது இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 99 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் கொட்டும் மழையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அரங்குளநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி- தெய்வானை சன்னிதானத்தில் பக்தர்கள் மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர் முன்னதாக கோயில் முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
ஆதனக்கோட்டை அருகே விநாயகர், மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர்கோவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பாலதண்டாயுதபாணி
புதுக்கோட்டை திருக்கோவில்களை சேர்ந்த குமரமலை பாலதண்டாயுதபாணி மலைக்கோவிலில் தீபத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. கோவில் முன் கார்த்திகை தீப கொப்பரையில் பக்தர்களின் சரணகோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் அடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் திருகார்த்திகையை முன்னிட்டு சரவிளக்குகள் ஏற்றப்பட்டது.
ஆலங்குடி தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் அனைத்து, சாமி சன்னதிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீப திருநாளையொட்டி கவிநாடு கண்மாயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story