பேரணாம்பட்டில் மாடி வீடு இடிந்து 9 பேர் பலி
பேரணாம்பட்டில் மாடி வீடு இடிந்து 9 பேர் பலியானார்கள்.
பேரணாம்பட்டு,
அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும் வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆந்திரா, கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் மூலம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மலட்டாறு மற்றும் கானாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் பேரணாம்பட்டு நகரில் குடிசைப் பகுதிகளிலும், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வருவாய்த் துறையினர், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அங்குள்ள பள்ளிகள், மசூதிகளில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்து இடைவிடாமல் விடிய விடிய சுமார் 89 மில்லி மீட்டர் மழை பெய்தது. பேரணாம்பட்டு நகரம் வழியாக ரங்கம் பேட்டை கானாறு 8 கி.மீ தூரம் வரை செல்கிறது.
இந்த கானாற்றில் வெள்ளம் அதிகரித்து சுமார் 7 அடி உயரத்திற்கு நகரிலுள்ள புதுவீதி, ஒத்த வாடை, குல்ஜார் வீதி, லால் மதத் அஜிஜியா வீதி, தாஹீர் வீதி, நல்ல தண்ணீர் வீதி, தோப்பு வீதி, முல்லா வீதி, ரஷீதாபாத் உள்ளிட்ட ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தெருக்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் பேரணாம்பட்டு டவுன் அஜிஜியா வீதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கவுசர் (வயது 45), இவரது மகள் ஆசிரியை தன்சிலா (27) ஆகிய 2 பேரும் தங்களது பக்கத்து வீடான அனீசா பேகம் (63) என்பவரது பழமையான வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று மாடி பகுதியில் சிமெண்டு ஷீட் வேயப்பட்ட அறையில் தூங்கி கொண்டிருந்தனர். தரைத்தளத்தில் அனீசா பேகம் மற்றும் குடும்பத்தினர் தூங்கினர். இந்த வீட்டில் மொத்தம் 18 பேர் தூங்கி உள்ளனர்.
நேற்று காலை 6.15 மணியளவில் பலத்த மழையின் காரணமாக அனீசா பேகத்தின் மாடியிலுள்ள சிமெண்டு ஷீட் அறையின் சுவர் முழுவதும் சரிந்தது. அப்போது வீட்டின் தரைத்தளமும் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரும் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அனீசா பேகத்தின் பேத்தி அப்ரா (3) காப்பாற்றும்படி கதறி அழுத குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது வீடு தரைமட்டமாகி கிடந்ததையும், சிறுமி அப்ரா இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த பேரணாம்பட்டு முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்தவர்களில் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
அனீசா ேபகம் (63), இவரது மருமகள்கள் ரூஹினாஸ் (27), மிஸ்பா பாத்திமா (22), பேரக்குழந்தைகள் ஹபீரா (4), தாமீத் (2), மனுல்லா (2) அப்ரா (3), ஆசிரியை கவுசர் (45), இவரது மகள் தன்சிலா (27).
மேலும் அனீசா பேகத்தின் மகன்கள் ஹபிப் ஆலம் (30), ஷன்னு அஹம்மத் (23), மருமகன் இலியாஸ் அஹமத் (40), மற்றும் உறவினர்கள் முஹம்மத்தவ்சிப் (28), முஹம்மத் தவ்பிக் (19), நாசிரா (50), ஹாஜிரா (8), ஹாஜிரா நிஹாத் (30), மொய்தீன் (6) ஆகிய 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஹாஜிரா நிகாத், சிறுவன் மொய்தீன் ஆகிய 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சசிகலா காலை சுமார் 8 மணிக்கு அங்கு வந்தார். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் இங்கு என்ன வேடிக்கை பார்க்கிறீர்கள், தூரமாக செல்லுங்கள் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சி ஆணையாளர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கலெக்டரை கண்டித்து, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், பொதுமக்கள் 500 பேர் திரண்டு பேரணாம்பட்டு வழியாக செல்லும் ரங்கம்பேட்டை கானாறு பகுதியை தூர்வாரக் கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை கண்டித்து கோஷமிட்டு முற்றுகையிட்டனர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இச்சம்பவத்திற்கு முதலில் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும், இங்கேயே 2 நாட்கள் முகாமிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை பெற்றுத்தருவதாகவும், கானாறு செல்லும் பகுதிகளை தூர் வார உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் வந்து இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை பார்வையிட்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா.ரூ5 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாகவும், உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் கூறினர். மேலும் கானாறு செல்லும் பகுதிகளை தூர் வார நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமலு விஜயன், வில்வநாதன், சப்- கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் வெங்கடேசன், முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் வீரமணியும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹபிப் ஆலம் தனது மனைவி ரூஹி னாஸ், மகள் அப்ரா, மகன் மனுல்லா ஆகியோரையும், காயமடைந்த மற்றொருவரான ஷன்னு அஹம்மத் தனது மனைவி மிஸ்பா பாத்திமாவையும் பறிகொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு இடிந்து விழுந்து 9 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story