திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலை உச்சியில்  மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 20 Nov 2021 12:44 AM IST (Updated: 20 Nov 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது.

தீபத்திருவிழா
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்கு உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமாலுக்கும், பிரம்மாவிற்கும் இடையே ஏற்பட்ட தான்"என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம் கூறப்படுகிறது. இந்த நாளையே இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக பக்தர்கள் கருதி அண்ணாமலை என்று பெயர் சூட்டி வணங்கி வருகின்றனர்.

அக்னி பிழம்பாக...

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி அளித்த நாளான 10-ம் நாள் விழாவின்போது அதிகாலை கோவில் வளாகத்தில் "பஞ்ச பூதங்களாக திகழ்வதும் இறைவனே" என்பதை விளக்கும் வகையிலும், உலகத்தின் இயக்கத்தை நடத்துவதும், உயிர்களை காப்பதும் "ஜோதி"தான் என்பதை விளக்கும் வகையிலும் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் சூரிய பகவான் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
இவ்வாறு சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி மாடவீதி உலாவும் தடை செய்யப்பட்டதால் ஆகம விதிகளின் படி சாமி உற்சவ உலா நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

பக்தர்களின்றி...

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 
இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்காக ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்.  அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.30 மணியளவில் பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு தீபத்தை வழிப்பட்டனர். ஆனால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி காணப்பட்டது.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி பரணி தீபம் கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அதன்பின் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

தீர்த்தவாரி

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடிய படி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். பக்தர்கள் முழக்கம் விண்ணை பிளந்தது. 
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நிகழ்ச்சிகளின் போது கோவில் பணியாளர்கள், தீபத் திருவிழா ஏற்பாடு குறித்த துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூடியூப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கிரி எம்.எல்.ஏ., கோவில் இணை ஆணையர் அசோக்குமார்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ஏராளமான போலீசார், கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

சண்டிகேஸ்வரர் உற்சவம்

கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நேற்று பிற்பகல் 2.51 மணிக்கு நிறைவு பெற்றது.
தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story