தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 20 Nov 2021 12:50 AM IST (Updated: 20 Nov 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சந்துகடைகளில் மது விற்பனை 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் துங்கபுரம், கோவில்பாளையம், வேட்டக்குடி, வயலப்பாடி பகுதிகளில்  சந்து கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சந்துகடைகளில் மது விற்பதால் கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தும்  பொது இடங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்தும் செயலில் ஈடுபடுகின்றனர். துங்கபுரம், தேனூர் கிராமங்களில் பள்ளிக்கு மிக அருகிலேயே சந்துகடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், வேப்பூர், பெரம்பலூர். 

சேறும், சகதியுமான சாலை 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நெற்குணம் கிராம பகுதியில் அரசினர் காலனி உள்ளது. இங்கு 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால் இப்பகுதியில் தார்சாலை  வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழைபெய்யும்போது இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அஜித்குமார், நெற்குணம், பெரம்பலூர். 

எலும்பு கூடான மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், தெற்கு இருங்களூரில் உள்ள அப்பாசாமி தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இருங்களூர், திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் கிராமம் வடக்கு தெரு காலனி பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் செல்ல வழியின்றி மழைநீரும்,  கழிவுநீரும் ஒன்றாக கலந்து தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முத்தமிழ்ச்செல்வன்,  மால்வாய், திருச்சி. 

தெருவிளக்கு எரியவில்லை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாடுவதினால் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர். 

பஸ் வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூரில் இருந்து உடவயல், மேலப்புதுவயல், துவரவயல், மூலிப்பட்டி வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்  கடந்த 5 மாதங்களாக வரவில்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சதீஷ்குமார், மேலப்புதுவயல், புதுக்கோட்டை. 

தவறான பெயர் பலகையால் பொதுமக்கள் குழப்பம் 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள கடாரங்கொண்டான் என்ற ஊரில் தேசிய நெடுஞ்சாலை பணி முடிந்து வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ஊரின் பெயர் கிட்ரங்கொண்டம் என தவறாக எழுதப்பட்டு உள்ளது. இதனால் விலாசம் தேடி வருபவர்கள் குழப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம், அரியலூர். 

பழுதடைந்த கழிவுநீர் வாய்க்கால் 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி தெற்கு தெரு அரசு காலனி பகுதியில் ஆதி திராவிட மக்கள் சுமார் 50 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு சுமார் 17 ஆண்டுகள் ஆகின்றன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி கழிவுநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
லூயிஸ், அரவக்குறிச்சி, கரூர். 

சிமெண்டு சாலையில் மண் குவியல் 
திருச்சி மாவட்டம், பச்சைமலை தென்புறநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கம்பூர், தண்ணீர்பள்ளம், பூதக்கால், பெரியசித்தூர், டாப்செங்காட்டுப்பட்டி முதலான கிராமங்களில் கனமழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, ஊரில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலைகளில் சேடைமண் குவிந்துள்ளது. இதை அப்புறப்படுத்த அப்பகுதி மலைவாழ்மக்கள் தினம் தினம் போராடி வருகின்றனர். மழைகாலங்களில் ஏற்படும் இவ்வகை இடர்பாடுகளை தடுக்க, ஊரைச்சுற்றி தடுப்புச்சுவர் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பச்சைமலை, திருச்சி 

சாக்கடை கலந்து வரும் குடிநீர் 
திருச்சி மாவட்டம், துறையூரில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்கும் போது ஒவ்வொரு முறையும் குடிநீர் குழாயில் நீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரியாத நிலையில் துறையூரில் உள்ள சாமிநாதன் காய்கறி மார்க்கெட் தெரு மற்றும் சில பகுதிகளில் குடிநீர் வழங்கும் போது குடிநீர் குழாயில் இருந்து வரும் தண்ணீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு துறையூர் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் தூய்மைப் படுத்தியும், சாக்கடை நீர் கலந்து வருவதையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், துறையூர், திருச்சி. 

போக்குவரத்து நெரிசல் 
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் இருந்து மோகனூர், ஸ்ரீராமசமுத்திரம் சாலையில் உள்ள ராசபிள்ளை முடக்கில் காலை, மாலை இருவேளையும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
வாகன ஓட்டிகள், காட்டுப்புத்தூர், திருச்சி. 


Next Story