திருத்தங்களுடன் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்


திருத்தங்களுடன் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 20 Nov 2021 1:13 AM IST (Updated: 20 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கூறிய திருத்தங்களுடன் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார்.

தஞ்சாவூர்:
விவசாயிகள் கூறிய திருத்தங்களுடன் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார்.
விருப்ப மனு
நகர்ப்புற தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பங்கேற்று விருப்ப மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி விட்டது. இதற்கான விருப்ப மனு பெறும் பணிகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் சில வசதிகளை கருதி 2 நாட்களுக்கு முன்னதாகவே விருப்ப மனுக்களை கொடுத்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் தொண்டர்கள் எவ்வாறு உற்சாகமாக தேர்தலை சந்திக்க உள்ளனர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் தொண்டர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தங்களின் பலத்தை காட்ட வேண்டும். எனவே எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்து தொண்டர்களிடம் கணிசமாக இருக்கிறது. 
கூட்டணி
சிலர் கூட்டணி வேண்டும் என்கிறார்கள். கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில தலைவர் முடிவு செய்வார். வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 
தற்போது மத்திய அரசு வரியை குறைத்த நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எல்லாம் வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
காலஅவகாசம்
ஆனால் தமிழக அரசு விலையை குறைக்காமல் இருப்பது நியாயமல்ல. நிச்சயம் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும். வேளாண் சட்டங்களை பொறுத்தவரை பா.ஜ.க. செயல் சரியானது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். வேளாண் சட்டம் குறித்து புரிதலை கொண்டு வர இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்பதால் தற்போது வாபஸ் பெற்றுள்ளோம். சட்டங்கள் தவறு என்பதால் அல்ல. 
இதை வாய்ப்பாக பயன்படுத்தி காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் தேசத்தில் மக்களிடம் பிளவு மனப்பான்மையை உருவாக்கி வருகிறார்கள். விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக புரிந்துக்கொண்ட பிறகு, மீண்டும் விவசாயிகள் கூறிய திருத்தங்களுடன் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் சண்முகராஜ், மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story