கல்லூரிக்கு சென்ற பேராசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபர்
கல்லூரிக்கு சென்ற பேராசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபர் சிக்கினார்.
பெரம்பலூர்:
கல்லூரி பேராசிரியை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி கனகாம்பாள் (வயது 30). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் நேற்று கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தபோதும், வேலை நிமித்தமாக கனகாம்பாள் நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
சங்கிலியை பறித்தார்
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்- கல்பாடி பிரிவு சாலை அருகே சென்றபோது கனகாம்பாளின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்துக்கொண்டு திருச்சி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் தப்பி சென்றார்.
இதனால் திடுக்கிட்ட கனகாம்பாள் பின்னர் சுதாரித்துக்கொண்டு, அந்த வாலிபரை தனது ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து விரட்டி சென்றார். அப்போது சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கனகாம்பாள் தெரிவித்தார்.
துரத்தி பிடித்தனர்
இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில், அந்த வாலிபரை சினிமா பாணியில் துரத்திச்சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை சென்னை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பிச்சென்றார். ஆனாலும் போலீசார் விடாமல் பின்தொடர்ந்து சென்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வாலிபரை பிடிப்பதற்காக தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் சரக துணை சூப்பிரண்டு(பொறுப்பு) மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மற்றும் மங்களமேடு, வி.களத்தூர், பாடாலூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து எண் 1, 2 போலீசார் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வாலிபரை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து தாலிச்சங்கலி, மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மதினா நகர், அல் அமீன் தெருவை சேர்ந்த சையது மசூத் மகன் சாகுல் ஹமீது (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாகுல் ஹமீதுவை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட தாலிச்சங்கிலியை கனகாம்பாளிடம் போலீசார் ஒப்படைத்தனர். பேராசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவரை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story