மலைக்கோட்டை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் மகா தீபம்


மலைக்கோட்டை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் மகா தீபம்
x
தினத்தந்தி 20 Nov 2021 1:36 AM IST (Updated: 20 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோட்டை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலைக்கோட்டை
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று மாலை 6.18 மணி அளவில் மலை உச்சியில் உள்ள கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, 600 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரமாண்ட திரி தயாரிக்கப்பட்டது. பின்னர் மலை உச்சிக்கு தூக்கி சென்று கயிறு கட்டி மேலே உள்ள கொப்பரையில் வைக்கப்பட்டது.
 அந்த கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் அளவு தயாரிக்கப்பட்டு ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் கார்த்திகை தீபதிருநாளான நேற்று இந்த பிரமாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
சுவாமிகள் புறப்பாடு
 இதற்காக நேற்று மாலை 5.30 மணிக்கு மேல், தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி மலை உச்சியில் உள்ள அரச மரத்தடிக்கு தூக்கி வரப்பட்டது. பின்னர் அங்கு நின்றவாறு மலை உச்சியில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றார்கள். அதைத்தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து மாலை சரியாக 6.18 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று மாலை தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்த கார்த்திகை தீபம் தொடர்ந்து 3 நாட்களுக்கு அணையாமல் எரியும். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story