ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் சூரஜ் ரேவண்ணா வேட்புமனு தாக்கல்
கர்நாடக மேல்சபை தேர்தலில் ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் சூரஜ் ரேவண்ணா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் தேவேகவுடா குடும்பத்தின் மற்றொரு வாரிசும் அரசியலில் களமிறங்கி உள்ளார்.
ஹாசன்: கர்நாடக மேல்சபை தேர்தலில் ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் சூரஜ் ரேவண்ணா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் தேவேகவுடா குடும்பத்தின் மற்றொரு வாரிசும் அரசியலில் களமிறங்கி உள்ளார்.
மேல்சபை தேர்தல்
கர்நாடகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) மேல்சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மேல்சபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் மேல்சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகளும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவும் போட்டியிடலாம் என்றும் தகவல் வெளியாகின.
சூரஜ் ரேவண்ணா
இந்த நிலையில் மேல்சபை தேர்தலில் ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) தேர்தலில் சூரஜ் ரேவண்ணா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாசனில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரஜ் ரேவண்ணா நேற்று ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ஆர்.கிரீசிடம் வேட்புமனுைவ தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மந்திரி ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. உள்பட பலர் இருந்தனர்.
ஹாசன் மாவட்டம் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வருவதால், சூரஜ் ரேவண்ணா மேல்சபை தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.
கடும் விமர்சனம்
ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளார். அவருடைய மகன்கள் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி ரேவண்ணா ஆகியோர் அரசியலில் உள்ளனர். மேலும் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி மற்றும் மகன் நிகில் குமாரசாமி மற்றும் ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர்.
இந்த நிலையில் தேவேகவுடாவின் மற்றொரு பேரனும், ரேவண்ணாவின் மற்றொரு மகனுமான சூரஜ் ரேவண்ணா தற்போது அரசியலில் களமிறங்கி உள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சியை குடும்ப கட்சி என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் தற்போது தேவேகவுடா குடும்பத்தில் மற்றொரு வாரிசு அரசியலில் வந்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
Related Tags :
Next Story