நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திசையன்விளை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது.
நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் நம்பியாற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திசையன்விளை அருகே உள்ள நம்பியாறு அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இந்த அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு மறுகால் பாய்தோடுகிறது.
நம்பியாறு அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களிலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. உபரி நீர் மறுகால் பாய்ந்து ஆத்தங்கரைபள்ளிவாசல் அருகே கடலில் கலக்கிறது.
முன்னதாக உபரிநீர் ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வழியாக கடலுக்கு செல்கிறது. நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் நம்பியாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏறப்ட்டது.
தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
இதன் காரணமாக அந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி மற்றும் அதனுடன் இணைந்திருந்த சாலை பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் அந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலை துண்டிக்கப்பட்டதால் ஆத்தங்கரைபள்ளிவாசலுக்கு வந்த பக்தர்கள் மாற்று வழியாக சென்றனர். தரைப்பாலத்திற்கு பதிலாக அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் மழை
இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. பிற்பகலில் லேசான மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேங்கி இருந்த தண்ணீர் வடியவைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பெய்த மழையால் சாலையில் இந்த பள்ளங்களிலும், தாழ்வான பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணை
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணை நீர்மட்டம் 139.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,420 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1,698 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர காட்டாற்று தண்ணீர், கடனாநதி, ராமநதி அணைகளின் உபரி நீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த போதிலும் நீரோட்டம் அதிகமாக இருந்தது.
பாபநாசம் அணையுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 144 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 91.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 398 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 26.50 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து 72 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
குற்றாலம்
குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்கனவே குறைந்து இருந்தது. ெதாடர்ந்து 2 நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதனால் யாரும் அருவிகளில் குளிக்கவில்லை. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story