ஆட்டோ - லாரி மோதி விபத்து; கிராம பஞ்சாயத்து தலைவி, மகன்-மகள் உள்பட 5 பேர் பலி
மலவள்ளி அருகே ஆட்டோவும், லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவி, அவரது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியானார்கள்.
ஹலகூர்: மலவள்ளி அருகே ஆட்டோவும், லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவி, அவரது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியானார்கள்.
ஆட்டோ - லாரி மோதல்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா பண்டூர் கிராமத்தில் வசித்து வந்தவர் முத்தம்மா(வயது 45). இவர் பண்டூர் கிராம பஞ்சாயத்து தலைவியாகவும் இருந்து வந்தார். இவர் கொரமா சமுதாயத்தில் இருந்து தேர்வான முதல் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆவார். இந்தியாவிலேயே கொரமா சமுதாயத்தில் இருந்து மக்கள் பிரதிநிதியாக தேர்வான முதல் பெண் இவர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் இவருக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சுமலதா எம்.பி. உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
முத்தம்மாவின் மகள் பசமணி(30), மகன் வெங்கடேஷ்(25) ஆவர். பசமணிக்கு திருமணமாகி சாமுண்டேஸ்வரி(8) என்ற மகளும், 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று காலையில் முத்தம்மா, தனது மகள் பசமணி, மகன் வெங்கடேஷ் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மத்தூர் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். மாலையில் அங்கிருந்து ஆட்டோவில் அனைவரும் புறப்பட்டனர். அவர்கள் நெலமாக்கனஹள்ளி கேட் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி இவர்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.
5 பேர் பலி
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்து வந்த கிராம பஞ்சாயத்து தலைவி முத்தம்மா, 2 குழந்தைகள், பசமணி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடக்கப்போவது தெரிந்ததும் ஆட்டோ டிரைவர் கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் மலவள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story