2 பேர் விடுதலையை ரத்துசெய்யாவிட்டால் உள்துறை செயலாளர் ஆஜராக நேரிடும்- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகி ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற 2 பேரின் விடுதலையை ரத்து செய்யவில்லையென்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை
சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகி ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற 2 பேரின் விடுதலையை ரத்து செய்யவில்லையென்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதலையாகி கொலையில் ஈடுபட்ட 2 பேர்
மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த இளவரசி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 19.11.2020 அன்று திருச்சியில் என் சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் புறப்பட்டோம். அப்போது எனது கணவரை, உமாசங்கர் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சந்திக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து அவர் எங்களுடன் திருச்சிக்கு வரவில்லை. எனது மகனை மட்டும் அழைத்துச்சென்றேன். அன்று இரவு எனது கணவரிடம் செல்போனில் பேசியபோது உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ் பாண்டியன் ஆகியோர் கணவருடன் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது.
சிறிது நேரத்தில் என் கணவரை அவர்கள் கொடூரமாக கொன்றதாகவும், அவர்களை போலீசார் கைது செய்ததும் தெரிந்தது. உமாசங்கரும், சாய் பிரசாத்தும் கடந்த 2005-ம் ஆண்டில் குமரகுரு என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்து, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆணை பிறப்பித்துள்ளது.
ரத்து செய்யக்கோரி மனு
வெளியில் வந்த பின்பு தான் என் கணவரை கொலை செய்துள்ளனர். மேலும் சில கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதுரை, தேனி மாவட்ட போலீஸ்நிலையங்களில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்கள் முன்கூட்டியே விடுதலையாகும்போது, எதிர்காலங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற சிறைத்துறையின் நிபந்தனைகளை மீறியுள்ளனர்.
இவர்கள் வெளியில் இருந்தால் மேலும் பல கொலைச்சம்பவங்களில் ஈடுபடுவார்கள். எனவே அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியில் வந்த 2 பேர், மனுதாரரின் கணவர் நாகேந்திரனை கொலை செய்துள்ளனர். உடனடியாக மனுதாரர் இளவரசி, அந்த 2 பேரின் விடுதலையை ரத்து செய்யும்படி 25.11.2020 அன்று தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மனுதாரர் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு, சிறைத்துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளதாகவும், ஆனால் அந்த பரிந்துரை நிலுவையில் உள்ளதாகவும் அரசு வக்கீல் தெரிவிக்கிறார். இது வருத்தத்தை அளிக்கிறது.
உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்வது குறித்து வருகிற 23-ந்தேதிக்குள் உள்துறை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து அதுபற்றி சிறைத்துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் உள்துறை செயலாளர் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story