நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று சொக்கப்பனை தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பு மேளதாளம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து யாகம் வளர்த்து சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
திருக்கார்த்திகையையொட்டி நேற்று மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6-45 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து நெல்லை டவுன் சுவாமி சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். நேற்று முன்தினம் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் மேளதாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சொக்கப்பனை முக்கிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
இரவு 7-15 மணிக்கு பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து சென்று சுவாமியிடம் அனுமதி பெற்று வரப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். சொக்கப்பனை அணைந்ததும் அதில் இருந்து சாம்பலை எடுத்து நெய் விட்டு மையாக்கி சுவாமி-அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு சாலைக்குமாரசாமி கோவில், கைலாசநாதர் கோவில், கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோவில், முத்தாரம்மன் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்திஈசுவரர் கோவில், மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருகார்த்திகை திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் இறக்கம் தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் நேற்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாநகரம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீதிகள் அனைத்தும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன.
Related Tags :
Next Story