தமிழக அரசு பொங்கல் பரிசுடன் ரூ.2,500 வழங்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்
தமிழக அரசு பொங்கல் பரிசுடன் ரூ.2,500 வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.
நெல்லை:
நெல்லையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பரிசாக டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து உள்ளார். அதை பார்த்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து உள்ளனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் தி.மு.க. அரசு வரியை குறைக்காமல் உள்ளது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, விலை குறைய வழிவகை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நெல்லை கலெக்டர் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வரவேற்பதுடன், ஆதரிக்கிறோம். அதே போல் ஏற்கனவே போட திட்டமிடப்பட்டுள்ள 8 வழி பசுமை சாலை, 10 வழிச்சாலை மற்றும் பாதுகாப்பு சாலைகள் அமைக்கவும் முதல்-அமைச்சர் அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் திருநாளை கொண்டாட 20 பரிசு பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2,500 மற்றும் வேட்டி, சேலைகளும் வழங்க வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு நன்மை தரும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அர்ஜூன் சம்பத், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்து மனு கொடுத்தார். அப்போது நெல்லை மாவட்ட தலைவர் உடையார், பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநகர தலைவர் கண்ணன், முருகானந்தம், துணைத்தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story