‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை நடுவில் பள்ளம்
சேலம் செவ்வாய்பேட்டை பஜார், நாவலர் நெடுஞ்செழியன் சாலையில் தொலைபேசி பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மற்றும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஜி.எச். சாலை என்பதால் ஆம்புலன்ஸ்களும் சென்று வர இடையூறு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்தால் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.
-ஊர்மக்கள், செவ்வாய்பேட்டை, சேலம்.
====
வேகத்தடை அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இனாம் பைரோஜி பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இந்த பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-கோ.அருண்குமார், இனாம் பைரோஜி, சேலம்.
==
தேங்கி கிடக்கும் குப்பைகள்
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி குள்ளவீரன்பட்டி பகுதியில் குப்பைகள் சாலையில் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளன. தேங்கி உள்ள குப்பைகள் இதுவரை அள்ளப்படாததால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேலும் மழையினால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், குள்ளவீரன்பட்டி, சேலம்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை அணியாபுரம் ஏ.சி.டி. நகரில் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டுகிறார்கள். அதிகளவில் குப்பைகள் குவிந்த பின் எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து தினசரி குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், ஏ.சி.டி. நகர், நாமக்கல்.
===
போக்குவரத்து நெரிசல்
சேலம் அழகாபுரம் காவல் நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் ஒரு சிலர் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதனாலேயே போக்குவரத்து நெரிசல் மேலும் நீடிக்கிறது. எனவே போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.
===
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பருவதனஹள்ளிக்கு உட்பட்ட அண்ணாநகர் காலனி முதல் வீதியில் அமைந்துள்ள தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லை. தெருவில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதாரகேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு சுமார் 20 ஆண்டுகளாக இதே நிலை தான் உள்ளது. மேலும் தெருவிளக்கும் இல்லை. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், அண்ணாநகர் காலனி, தர்மபுரி.
ஓசூர் என்.ஜி.ஓ. காலனியில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாக்கடை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மழைக்காலம் என்பதால் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், என்.ஜி.ஓ.காலனி, ஓசூர்.
சேலம் சின்னத்திருப்பதி வரதராஜன்நகர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதுடன் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் முட் செடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றன. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.அமுதா, வரதராஜன் நகர், சேலம்.
====
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாநகராட்சி ஜோதி தியேட்டர் ரோட்டில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்களால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் தெருநாய்கள் சண்டை போடுவதால் தூங்ககூட முடிவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ராமு, சேலம்.
===
ஆமை வேகத்தில் நான்குவழி சாலை பணி
கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சாலை பணிகள் இன்னமும் முடிவடையாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் செல்லும் நான்கு வழிச்சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
ஓசூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 15-வது வார்டில் 15 ஆண்டுகளாக சாலை வசதியின்றி மிகவும் அவதிப்படுகிறோம். குறிப்பாக ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குடியிருப்பு வாசிகள், ஓசூர்.
=====
Related Tags :
Next Story