வேளாண் திருத்த சட்டங்கள் வாபஸ்:மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற்றிருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலம்:
மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற்றிருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கே.என்.நேரு பேட்டி
சேலத்தில் நேற்று நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது குரல் இந்தியா முழுவதும் ஒலித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, விவசாயிகளுக்கு பல்வேறு நெருக்கடி கொடுத்தனர். 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சட்டம் வருவதற்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு தான் காரணம். தற்போது 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விவசாயிகளின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்கள் வாபஸ் பெற்றது குறித்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, அடுத்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை நினைத்து தற்போது வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவியுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேளாண் திருத்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது, விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. பா.ஜனதா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி பா.ஜனதாவின் சித்து வேலை எடுபடாது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story