சேலத்தில் 4 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள்: பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு-அமைச்சர் கே.என்.நேரு உறுதி


சேலத்தில் 4 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள்: பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு-அமைச்சர் கே.என்.நேரு உறுதி
x
தினத்தந்தி 20 Nov 2021 4:00 AM IST (Updated: 20 Nov 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்து பேசினார்.

சேலம்:
சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்து பேசினார்.
குறைதீர்க்கும் முகாம்
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 3 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நேற்று 3-வது நாளாக சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வரவேற்றார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், தி.மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
30 நாட்களில் நடவடிக்கை
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கும் நானே நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுள்ளேன். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலமாக முதியோர் உதவித்தொகை கேட்டு 9 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதில் 7 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கானன ஆணை தயார் நிலையில் உள்ளது. 75 சதவீதம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
தி.மு.க. கோட்டையாக...
முன்னதாக நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் மேம்பாலங்களை தவிர வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது கடந்த 2 நாட்களில் மட்டும் பொதுமக்கள் அளித்துள்ள சுமார் 26 ஆயிரம் மனுக்களே அதற்கு சாட்சியாகவே உள்ளது. சேலத்தில் தெருக்களில் மழைநீர் தேங்குவதாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பா.ம.க.வை சேர்ந்த அருள் எம்.எல்.ஏ. இங்கு பேசினார். இது 6 மாதத்தில் உருவான பிரச்சினை இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? எது எப்படியோ, ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளை தி.மு.க. அரசு தீர்க்கும்.
மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலத்தை தி.மு.க. கோட்டையாக வைத்திருந்தார். அதேபோல், திருச்சியை எப்படி தி.மு.க. கோட்டையாக அமைச்சர் கே.என்.நேரு வைத்திருக்கிறாரோ? அதேபோல், சேலத்தை மீண்டும் தி.மு.க. கோட்டையாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
முடிவில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் என மொத்தம் 33 பேருக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனுக்களுக்கு உரிய தீர்வு
இதனை தொடர்ந்து அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியிலும், கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரியிலும், சூரமங்கலம் சோனா கல்லூரியிலும் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களிலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் அவற்றை கலெக்டர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் வழங்கி உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சிகளில் தி.மு.க.மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர ஜெயக்குமார், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன், வக்கீல் அண்ணாமலை, சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், சரவணன், சாந்தமூர்த்தி, குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story