கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலம் கோவில்களில் மகாதீபம் ஏற்றி வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலம் கோவில்களில் மகாதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்:
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலம் கோவில்களில் மகாதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மகாதீபம்
கார்த்திகை மகா தீபத்திருவிழா நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
ஆனால் தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா எளிமையாக நடைபெற்றது. கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தாஸ்ரமம்
சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் உள்ள முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் மாலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் கோட்டை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவடி பழனியாண்டவர்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் தீபம் மற்றும் காவடி பழனியாண்டவர், தட்சிணகாளி, சர்வலோக நாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை தீ வைத்து கொளுத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
காவடி பழனியாண்டவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
கரபுரநாதர் கோவில்
இதேபோல் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலம் டவுன் காசிவிஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், சேலம் சீரங்கபாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மாநகரில் பல இடங்களில் பெண்கள் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டு அலங்கரித்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மேலும் அவர்கள் கொழுக்கட்டை சமைத்து அதை சாமிக்கு படைத்து வழிபட்டனர்.
சேலம் ரத்தினசாமிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் பொதுமக்கள் கோவில் முன்பு சொக்கப்பனை வைத்து கொளுத்தி வழிபட்டனர். மேலும் கடைவீதி, புதிய பஸ்நிலையம், 5 ரோடு பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றியிருந்ததை காணமுடிந்தது.
Related Tags :
Next Story