தர்மபுரி மாவட்டத்தில் தொடர் கனமழை ஏரிகள் நிரம்பி வயல்களில் தண்ணீர் புகுந்தது
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்தன.
அரூர்:
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்தன.
கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி தண்ணீர் வயல்களில் புகுந்தது. இதன் காரணமாக நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் பல இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன.
அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி உள்ளிட்ட அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. வள்ளி மதுரை, வறட்டாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதன் காரணமாக வறட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள ஏரிகள், சிறிய அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அரூர் அடுத்த சங்கிலிவாடி ஏரி 7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அதேபோல் அரூர் அடுத்த செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாலெடுப்பு ஏரி நிரம்பி, உபரிநீர் அருகில் இருந்த வயல்களில் புகுந்ததால் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நல்லம்பள்ளி
இதேபோன்று தொடர்மழை காரணமாக நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பெரிய ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதைகள் முழுவதும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைநீர் கரும்பு, நெல், மஞ்சள் மற்றும் பூந்தோட்டங்களில் புகுந்தது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி ஆகிய ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் கால்வாய்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து வெளியேறி குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மேலும் கோடியூர், தேங்காமரத்துப்பட்டி, மற்றும் செட்டியூர் காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் எர்ரப்பட்டி மற்றும் தொழில்மையம் ஆகிய இடங்களில் தார்சாலைகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பென்னாகரம்-காரிமங்கலம்
பென்னாகரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
காரிமங்கலம சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணகிரி அணை உபரிநீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ள கும்பாரஅள்ளி ஊராட்சி, பூமாண்டஅள்ளி ஊராட்சிகளில் உள்ள போலாம்பட்டி, பூமாண்டஅள்ளி பெரியபுதூர் மோதூர் உள்பட ஏரிகள் நிரம்பின.
தொப்பையாறு அணை நிரம்பியது
தொடர் மழை காரணமாக தொப்பையாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 6 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுவர் சரிந்து விழுந்தது
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்தது. இந்த மழை காரணமாக கடகத்தூர் அருகே உள்ள குண்டல்பட்டி கிராமத்தில் வீட்டின் சுவர் சரிந்து விழுந்தது. இதேபோல் மேலும் சில இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. தொடர் மழை காரணமாக மழை நீர் சாலையில் அதிக அளவில் குளம் போல் தேங்கியதால் தர்மபுரி ஏ.எஸ்.டி.சி. நகர் பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தர்மபுரியில் பென்னாகரம் சாலையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மழைநீர் புகுந்து தேங்கியது. இந்த மழை காரணமாக மாவட்டத்திலுள்ள தடுப்பணைகள், நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள டி.அம்மாபேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மாவட்டத்தில் சில இடங்களில் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியது.
Related Tags :
Next Story