‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 20 Nov 2021 12:17 PM IST (Updated: 20 Nov 2021 12:17 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாய்ந்த மரம் அகற்றம்

சென்னை கொரட்டூர், கே.ஆர்.நகர் பகுதியில் உள்ள பூங்காவில் சாய்ந்த மரத்தை அகற்றாததால் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் சிரமம் அடைவது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றி உள்ளனர். நன்றி.

சாலை படுமோசம்

அம்பத்தூர் மண்டலம் மாதானம் குப்பத்தில் இருந்து கள்ளிக்குப்பம் செல்லும் பாதை கனமழையால் மிகவும் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே அபாயமான படுகுழிகளாக உள்ளன. இதனால் மிகுந்த இன்னல்களுக்கு இடையே இந்த சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலை உள்ளது. தற்போது இந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்து தர வேண்டும். மழைக்காலம் முடிந்தவுடன் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.

கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

சென்னை பட்டாளம் கோவிந்தபுரம் அங்காளம்மன் கோவில் தெரு, முனுசாமி தெருவில் தொடர்ந்து கழிவுநீர் சூழ்ந்துள்ளது. கோவிலை சுற்றிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவுநீர் பிரச்சினையால் தினமும் இன்னல் அடைகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

- அங்காளம்மன், முனுசாமி தெரு மக்கள்.

எரியாத மின்விளக்குகள்

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் ஓ.எம்.ஆர். இணைப்புச்சாலை, களிக்குன்றம் பிரதான சாலைகளில் மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பன்னீர்செல்வம்.

டாக்டர் அழகப்பா சாலை சேதம்

சென்னை புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு-முரடாகவும், மேடு-பள்ளமாகவும் உள்ளது. இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள் அதிகம் உள்ளன. எனவே குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு மிகுந்த சிரமத்துக்கு இடையே வாகனங்களில் அழைத்துச் செல்லும் நிலைமை இருக்கிறது. எனவே சேதம் அடைந்த சாலைகளை கழிவுகள் மூலம் செப்பனிட்டு தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- புர்ஹான், புரசைவாக்கம்.

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

சென்னை பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததி நகர், பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, தாசரி தெரு, பங்காரு தெரு, போலேரியம்மன் கோவில் தெரு ஆகிய‌ தெருக்களில் கழிவுநீர் வீட்டுக்குள் வந்துவிடுகிறது. இதனால் மிகுந்த சிரமம் அடைகிறோம். எனவே கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.கே.கோதண்டன், பெரம்பூர்.

மின் கம்பத்தில் விரிசல்



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக் காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகளக்காட்டூர் கிராமத்தில் பல்லக்காலனி 2-வது தெருவில் இருக்கின்ற மின்கம்பம் விரிசல் அடைந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சின்னகளக்காட்டூர் கிராம மக்கள்.

விஷ பாம்புகள் நடமாட்டம்

சித்தாலப்பாக்கம் செந்தமிழ் நகர் மற்றும் ஜெயா நகர் பகுதிகளில் விஷ பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராஜேஸ்வரி, சித்தாலப்பாக்கம்.

மயானத்தை சுற்றி அசுத்தம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா பரணி புத்தூர் ஜோதி நகர் பகுதியில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் இடத்தை சுற்றி இப்படி அசுத்தமாக இருப்பது வேதனை அளிக்கிறது. சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ள இப்பகுதியை சுகாதாரமாக மீட்டெடுக்க வேண்டும்.

- ஆர்.ஜி.சீனிவாசன், ஜோதி நகர் நல்வாழ்வு சங்கம்.

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு



செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் போலீஸ்காலனி மற்றும் சாரதா தேவி தெருவில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இரை தேடி கால்நடைகளும், தெருநாய்களும் குப்பை கழிவுகளை கிளறுகின்றன. இதனால் இப்பகுதி மிகவும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றிட வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் சேராதவாறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- தனசேகர், ஊரப்பாக்கம்.

தெருநாய்களால் அவஸ்தை

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலை மாயாஜால் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் இருக்கைகளை கடித்து குதறுன்றன. மேலும் தெருவில் செல்வோர்களையும் விரட்டுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஜி.செல்வி, கானத்தூர்.

மக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்

செங்கல்பட்டு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் 6-வது வார்டு மாரியம்மன் கோவில் 1-வது தெருவில் மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. எப்போது கீழே விழுமோ? என்ற அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

- மாரியம்மன் கோவில் பகுதி வாழ் மக்கள்.

Next Story