கும்மிடிப்பூண்டி அருகே சிமெண்ட் கற்களை ஏற்றி சென்ற போது டிராக்டர் கவிழ்ந்து விபத்து; பெண் உள்பட 2 பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அருகே சிமெண்ட் கற்களை ஏற்றி சென்ற போது டிராக்டர் கவிழ்ந்ததில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோபால் ரெட்டிகண்டிகை கிராமத்தில் இருந்து ஆந்திரமாநிலம் ஸ்ரீசிட்டி நோக்கி (ஹாலோ பிளாக்) சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.டிராக்டரை சாணாப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சத்யா (வயது 32) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் டிராக்டரில் அமர்ந்து கூலித்தொழிலாளிகளான ஈரோட்டை சேர்ந்த செல்வம் (25), ஆந்திர மாநிலம் காசங்காடு குப்பத்தை சேர்ந்த வாணி (42) ஆகிய 2 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது, அதன் பின் டயர் வெடித்து டிராக்டர் பக்கவாட்டில் ரோட்டில் வலதுபுறமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த செல்வம் (25), வாணி (42) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், டிராக்டர் டிரைவர் சத்யா (31) காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story