திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது


திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 20 Nov 2021 4:28 PM IST (Updated: 20 Nov 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் நாராயணபுரம் தரைப்பாலம் மூழ்கியதால் திருப்பதிக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தரைப்பாலத்தின் 2 பகுதிகளிலும் போலீசார் இரும்பினாலான தடுப்புகளை அமைத்து யாரும் ஆற்றில் இறங்காதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக சென்னை, பூந்தமல்லி, திருவள்ளூர் பகுதியிலிருந்து கனகம்மாசத்திரம், திருத்தணி, நகரி, புத்தூர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருவாலங்காடு வழியாக திருப்பிவிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுற்று வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் குன்னவளம், குப்பத்துபாளையம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த கொசஸ்தலை ஆற்றை கடக்க முயன்ற 2 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து சென்று கொசஸ்தலை ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த 2 பேரை கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

Next Story