வ.உ.சி. துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் வலியுறுத்தல்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாடு
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 10-வது மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகவன் கட்சி கொடியை ஏற்றினார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடந்த மாநாட்டுக்கு தலைமைக் குழு ஆறுமுகம், பூமயில், ஜாய்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநகர செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் அரசியல் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசினார். மாநாட்டுக்கு ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், உடன்குடி ஆகிய இடங்களில் இருந்து நினைவுச்சுடர் கொண்டு வரப்பட்டது.
தீர்மானம்
மாநாட்டில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றி தனியார் மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும், ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் முறையான திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இன்றி, மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி மாநகர் மேம்பாட்டு கட்டமைப்பு பனிகளை முறைப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு கீழ் பகுதியில் லோயர் டேம் அமைத்து மழைக்காலத்தில் கடலில் கலந்து வீனாகும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம், குடிநீர் உபயோகத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும், 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் தீப்பெட்டி தொழிலுக்கான மூலப்பொருள் தட்டுப்பாட்டை போக்கியும், குடிசை, மற்றும் பகுதி எந்திர மயமாக்கப்பட்ட தீப்பெட்டிகளுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும், விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு, அவர் கடைசியாக நீதிமன்ற பணி செய்த கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ரவீந்திரன், சண்முகராஜ், பேச்சிமுத்து, அப்பாதுரை, சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான வருவாய்த்துறையினர், போலீசார் மீது நடவடிக்கை எடுத்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story