ஏரி தண்ணீர் மாசடைந்து உள்ளதா?
ஊட்டியில் ஏரி தண்ணீர் மாசடைந்து உள்ளதா? என்று மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் ஏரி தண்ணீர் மாசடைந்து உள்ளதா? என்று மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
ஊட்டி ஏரி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஏரியின் பரப்பளவு குறைந்து போனது. இதனால் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக மட்டும் ஏரி பயன்படுத்தப்படுகிறது. இதனை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 85 சதவீத பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இங்கு குழாய்கள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுநீர் ஏரி கரையோரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் ஏரியில் விடப்படுகிறது.
மாதிரி சேகரிப்பு
மேலும் ஏரியின் முன்பகுதியில் பெரிய குழாய் மூலம் காந்தலுக்கு கொண்டு செல்லப்பட்டு நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் மூலமும் சுத்திகரிக்கப்படுகிறது. முடிவில் காமராஜ் சாகர் அணையை தண்ணீர் சென்றடைகிறது. நகரில் பெய்யும் கனமழையால் வெள்ளத்தில் அடித்து வரப்படும் சகதி கலந்த தண்ணீர் ஏரியில் சேகரமாகிறது. இதனால் அடிக்கடி தண்ணீரின் நிறம் மாறி மாசடைந்து வருகிறது.
ஏரியில் தண்ணீர் தரம் எவ்வாறு உள்ளது என்று மாதந்தோறும் மாதிரி சேகரித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வக ஊழியர்களுடன் படகில் சென்று ஏரியின் நடுவே மாதிரிக்காக தண்ணீரை சேகரித்தனர். ஏரியின் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என 3 பிரிவுகளாக தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த மாதிரி சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் கூறியதாவது:-
ஊட்டி ஏரியில் தண்ணீர் நிலையாக இருப்பதால் மாசு அடைந்தது போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் கலப்பதற்காகவும், தண்ணீருக்குள் ஆக்சிஜன் இருப்பதற்காகவும் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ளது. மாதம்தோறும் ஏரி தண்ணீரில் காரம், அமிலத்தன்மை, ஆக்சிஜன் எந்த அளவு உள்ளது என்று மாதிரி சேகரித்து ஆய்வு செய்யப்படுகிறது. தண்ணீரில் ஆக்சிஜன் அளவு 4-க்கு மேல் இருக்க வேண்டும். ஊட்டி ஏரியில் கடந்த சில மாதங்களாக 6-க்கு மேல் இருப்பதோடு, ஆக்சிஜன் நல்ல நிலையில் உள்ளது.
இருப்பினும் திடீரென மழை பெய்யும் சமயங்களில் வெள்ளம் புகுந்தால் மீன்கள் இறக்கும் அபாயம் இருக்கிறது. தண்ணீரில் நுண்கிருமிகள், வேதியல் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் சோதனை முடிவில் கழிவுகள் அதிகமாக இல்லை என்பது தெரியவந்து உள்ளது. மாதந்தோறும் ஆய்வு முடிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story