சக்கலாத்தி பண்டிகை கொண்டாடிய படுகர் இன மக்கள்


சக்கலாத்தி பண்டிகை கொண்டாடிய படுகர் இன மக்கள்
x
தினத்தந்தி 20 Nov 2021 7:42 PM IST (Updated: 20 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் ‘சக்கலாத்தி’ பண்டிகை கொண்டாடினர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் ‘சக்கலாத்தி’ பண்டிகை கொண்டாடினர்.

‘சக்கலாத்தி’ பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடும் ‘சக்கலாத்தி’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் படுகர் இன மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் தங்களது முன்னோர்களை வரவேற்கும் வகையில் அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை, ஹூம்ரி உள்ளிட்ட மூலிகை செடிகளை வைத்து வீடுகளின் கூரை மற்றும் மாட்டுத்தொழுவத்தின் கூரைகளில் காப்பு கட்டினர். தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு தங்களது வீட்டில் உள்ள அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை பயன்படுத்தி வீட்டின் முன்புற வாசல்களில் நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் விவசாய கருவிகளின் படங்களை கோலமாக வரைந்தனர். 

படையலிட்டு வழிபாடு

பின்னர் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்தனர். இதையடுத்து அந்தந்த கிராமங்களில் உள்ள தொட்டமனை என்று அழைக்கப்படும் வீட்டை சேர்ந்த ஒருவர் பெரிய மண் சட்டியில் ஒவ்வொரு வீடாக சென்று முன்னோர்களுக்காக அவர்கள் தயாரித்த உணவுகளை சேகரித்தார். 

இதையடுத்து அந்த உணவுகளை, ஊருக்கு பொதுவான இடத்தில் வைத்து படையலிட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா ஒருவர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், தயாரித்த உணவுகளை பக்கத்து வீட்டாருக்கு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Next Story