நிரம்பி வழியும் ஈளாடா தடுப்பணை
கோத்தகிரியில் தொடர் மழையால் ஈளாடா தடுப்பணை நிரம்பி வழிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் தொடர் மழையால் ஈளாடா தடுப்பணை நிரம்பி வழிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈளாடா தடுப்பணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா கோடநாடு அருகே ஈளாடா கிராம பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 12 அடி வரை ஆழமும் கொண்ட பேரூராட்சிக்கு சொந்தமான தடுப்பணை அமைந்து உள்ளது. மலைப்பகுதியின் ஊற்றுக்களில் இருந்து வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலைய தொட்டிகளுக்கு கொண்டு வந்து தேக்கி வைத்து நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நிரம்பி வழிகிறது
இது மட்டுமின்றி இந்த தடுப்பணை நீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணை முழுக்கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை திட்டத்துக்கான அமைக்கப்பட்ட நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்த குறைபாடு காரணமாக மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பல ஆண்டுகளாக பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை தற்போது முழுக்கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.
Related Tags :
Next Story