தாளாளர் மீது பாலியல் புகார் எதிரொலி தனியார் நர்சிங் கல்லூரிக்கு ‘சீல்’ வைப்பு


தாளாளர் மீது பாலியல் புகார் எதிரொலி தனியார் நர்சிங் கல்லூரிக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 8:28 PM IST (Updated: 20 Nov 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே தாளாளர் மீதான பாலியல் புகார் எதிரொலியாக, தனியார் நர்சிங் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில், சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் உள்ளார். இவர், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து ஒரு மாணவி தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இதனிடையே ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் சாலைமறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் அர்ச்சனா கைது  செய்யப்பட்டார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. 
அமைதி பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, ஆர்.டி.ஓ. காசி செல்வி, திண்டுக்கல் மேற்கு தாசில்தார் சுரேஷ் பாபு, தாடிக்கொம்பு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவ, மாணவிகளிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கல்லூரிக்கு உடனடியாக ‘சீல்’ வைக்க வேண்டும், தாங்கள் படிப்பதற்கு வேறு கல்லூரியில் இடம் பெற்று தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவ, மாணவிகள் முன்வைத்தனர். 

கல்லூரிக்கு ‘சீல்’ வைப்பு
இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி லதா, கல்லூரிக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் சுரேஷ் பாபு கல்லூரிக்கு ‘சீல்’ வைத்தார். 
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர், உங்களின் கோரிக்கையை ஏற்று கல்லூரிக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாணவ,  மாணவிகளும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புமாறு கேட்டு கொள்கிறோம் என்றனர். 
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் திண்டுக்கல் பஸ் நிலையம் செல்வதற்கு பஸ் வசதி செய்யப்பட்டது. ஆனால் மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு செல்ல மறுத்து தங்களின் வருங்காலம் குறித்து கேள்வி எழுப்பினர். 
கைது செய்ய வலியுறுத்தல்
அதாவது, கல்லூரி நிர்வாகம் வசூலித்த கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும், கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளை அதே நிலையில் வேறு கல்லூரியில் படிக்க மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்றும், அதுபற்றி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அப்போது பெற்றோருடன் மாணவ,மாணவிகள் பேச்சுவார்த்தைக்கு வந்து தங்களது கோரிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது. 
மேலும் கல்லூரி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளதால் அனைவரும் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் வேண்டுகோள் விடுத்தனர்.

 மேலும் ஒரு மாணவி புகார்
இதைத்தொடர்ந்து சுமார் 60 சதவீத மாணவ-மாணவிகள் நேற்று விடுதியை காலி செய்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பஸ்களில் திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். சில மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊர் தொலைவில் இருப்பதால் நாளை (இன்று) செல்வதாக கூறி விடுதியிலேயே தங்கினர்.
இதனிைடயே தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் நேற்று மேலும் ஒரு நர்சிங் கல்லூரி மாணவி புகார் செய்தார். அதில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தன்னிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். இதுகுறித்தும் தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு முகாம்

கடந்த வாரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சுரபி கல்லூரி வளாகத்தில் பெண் குழந்தைகள் திருமண தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் பேசியவர்கள் சிறுமிகள், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து புகார் அளிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதில் ஏற்பட்ட தைரியத்தில்தான் கல்லூரி தாளாளரின் பாலியல் தொல்லைகளை மாணவிகள் வெளிக்கொண்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய தெரிவிக்கப்பட்ட 14417 என்ற எண்ணிலும் மாணவிகள் புகார் செய்து உள்ளனர். 
கல்லூரி தாளாளருக்கு வலைவீச்சு

இதனிடையே கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், ஜோதிமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
 இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. . 

  

Next Story