முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மு.க.ஸ்டாலின் வருகை
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா நடக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் கோவையில் இருந்து கார் மூலமாக நாளை மாலை திருப்பூர் வருகிறார்.
ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கிறார். 3 துணை மின் நிலையங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர் நல மையம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். இதுபோல் சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.55 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசுகிறார்.
விழா அரங்கம் அமைப்பு பணி
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு நேற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் விழா அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ. ஜெகநாதன் ஆகியோர் மைதானத்தை ஆய்வு செய்து அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டனர். கல்லூரி வளாகத்தில் சாலை அமைப்பு, விழா மேடைக்கு பின்புறம் பாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
அதுபோல் காலேஜ் ரோடு சாலை செப்பனிடப்பட்டு தார் தளம் அமைக்கும் பணியும் நேற்று ஜரூராக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்றது. பல்லடம் ரோடு கலெக்டர் அலுவலகம் முன்புறம் சாலையின் தடுப்புகளில் வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் ஆய்வு செய்தனர். மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
Related Tags :
Next Story