பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் பேட்டி


பெண்கள், குழந்தைகளின்  பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 11:00 PM IST (Updated: 20 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் பேட்டி

கோவை

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த தீபக் தாமோர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். 

அவர், நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்திற்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது அறைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும். அதற்காக தனி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளோம். 

அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தி போலீஸ் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர முதியவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

சாலை விபத்துகளை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். 

கோவையை அமைதியான மாநகரமாக வைக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருட்டு சம்பவங்களை குறைக்க ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

முன்னதாக புதிய கமிஷனரை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் வீல்சேரில்  வந்து போலீஸ் கமிஷனரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவரிடம் போலீஸ் கமிஷனர் ஆறுதல் கூறினார்.

Next Story