குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Nov 2021 11:39 PM IST (Updated: 20 Nov 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீர்

விழுப்புரம் பகுதியில் பெய்த கனமழையினால் கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு விழுப்புரம் புது ஏரிக்கும் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் புது ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அந்த ஏரிக்கரையில் வசிக்கும் மக்கள், ஏரியின் கரைப்பகுதியை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். 
இந்த தண்ணீர் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள விநாயகா நகர், சவுபாக்யா நகர், லட்சுமிநகர், குபேரநகர், செல்வசீமாட்டி நகர், போதிதர்மன் நகர், அப்துல்கலாம் நகர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததோடு தாழ்வான பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்புகளை சுற்றிலும் சூழ்ந்துள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மறியல் முயற்சி

இதேபோல் விழுப்புரம் அருகே வெ.அகரம் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து மறியல் செய்ய முயன்றனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் சமரசமாக பேசி நிவாரண உதவி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story