திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்


திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 20 Nov 2021 11:45 PM IST (Updated: 20 Nov 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

 மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று முன்தினம் கோவிலின் பின்புறமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. 

வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். 

ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. 

 2-வது நாளாக கிரிவலம்

இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினமும், நேற்றும் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணையதள முகவரி மூலம் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. 

இருப்பினும் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். 

கொரோனா காரணமாக கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து தொடர்ந்து மாதாமாதம் வந்த பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தினால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீபத்திருவிழாவையொட்டி கிரிவலம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த பரவசத்துடன் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

 கோவிலில் பக்தர்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், பெரும்பாலானோர் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அடங்குவர். 

அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த போலீசாரும், உள்ளூர் போலீசாரும் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதனால் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்களால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்று மிகுந்த வேதனை அடைந்தனர்.

Next Story