சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 44,500 கனஅடி நீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 44,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தண்டராம்பட்டு
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 44,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாற்றில் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வர தொடங்கியது. மேலும் அதிகரித்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 44 ஆயிரத்து 560 கனஅடி நீர் வரத்து தொடங்கி உள்ளது.
இந்த நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 கண்மாய்கள் வழியாக வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாறு படுகையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரையின் இருபுறமும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே தென்பெண்ணையாற்றின் படுகையில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி பெண் சாவு
இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
ராயண்டபுரம் கிராமத்தின் அருகே ஆற்றின் கரையோரப் பகுதியில் ஒதுங்கிய நிலையில் இருந்த பிணத்தை தண்டராம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்பு
சாத்தனூர் அணை பகுதியில் நேற்று முன்தினம் 155.4 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மழை குறைந்து காணப்பட்டாலும் கிருஷ்ணகிரி அணை நிரம்பி அதன் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சாத்தனூர் அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் அணை மற்றும் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story