குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி


குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Nov 2021 12:29 AM IST (Updated: 21 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். மழைநீர் தேங்கி நிற்காதபடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

வேலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். மழைநீர் தேங்கி நிற்காதபடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையினால் வேலூர் கன்சால்பேட்டை, இந்திராநகர், அம்பேத்கர்நகர், பெரியார்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் ஆறு போல் வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். 
மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி வேலூரில் 2 இடங்களில் சாலை மறியல் நடந்தது. அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் தெரிவித்தப்படி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கிய வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நின்றது. குறிப்பாக கன்சால்பேட்டை, இந்திராநகர் சுற்றி மழைநீர் தேங்கி காணப்பட்டது. அதனால் அவை தீவு போன்று காட்சியளித்தன. இந்திராநகர் பொதுமக்கள் அவசர, அத்தியாவசிய தேவைகளுக்காக தண்ணீரில் சென்று வரும் நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர்.

நிரந்தர தீர்வு காண வேண்டும்

இதுகுறித்து இந்திராநகர் பொதுமக்கள் கூறுகையில், மழை பெய்யும் வேளையில் எங்கள் பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்பது வாடிக்கையாகி விட்டது. மழைநீரில் தவளை, பாம்பு உள்ளிட்டவை வீட்டிற்குள் வந்து விடுகிறது. மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தெருவில் குளம்போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவிக்கும் நிலை காணப்படுகிறது.

கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரினால் குடியிருப்பு பகுதியில் மழைவெள்ளம் தேங்கி நிற்காது. வெள்ளம் தேங்கி நிற்கும்போது மட்டும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி தண்ணீரை அப்புறப்படுத்துகிறார்கள். எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.

---

Next Story