கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது


கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2021 12:34 AM IST (Updated: 21 Nov 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

பட்டதாரி வாலிபர் கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் யோகேஸ்வரன் (வயது25). பி.காம் பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

முன்விரோதம்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினருக்கும், யோகேஸ்வரனுக்கும் மிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்ததும், இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கொலை நடந்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசன் குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்தனர். 
இதில் முருகேசனின் மகன்களான ராஜேஷ் (24), விக்னேஷ் (21), சதீஷ் (19) மற்றும் இவர்களுடைய உறவினரான திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த கர்ணன் (31) ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

4 பேர் கைது

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ், விக்னேஷ், சதீஷ் ஆகிய 3 பேரையும் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி அருகே நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். திருவிடைமருதூர் அருகே உள்ள திருவெல்லியங்குடி கிராமத்தில் பதுங்கி இருந்த கர்ணனும் போலீசாரிடம் பிடிபட்டார்.  கைதான 4 பேரும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story