ஆட்டையாம்பட்டி பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்


ஆட்டையாம்பட்டி பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Nov 2021 2:14 AM IST (Updated: 21 Nov 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டையாம்பட்டி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் சிக்கினர்
ஆட்டையாம்பட்டி பகுதியில் தொடர் திருட்டுகளை தடுக்க சேலம் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
 விசாரணையில், அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த அர்ஜூனன் (வயது 35), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதேஸ்(22) என்பதும், ஆட்டையாம்பட்டி பகுதியில் இவர்கள் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆட்டையாம்பட்டி பகுதியில் திருட்டு
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பெத்தாம்பட்டியை சேர்ந்த நல்லம்மாள் (76) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் தங்க மோதிரத்தை திருடிச்சென்றதும், கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் காட்டில் வசிக்கும் கோகிலாவின் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெள்ளி தம்ளர், காமாட்சி விளக்குகள், கொலுசு, வெள்ளி செம்பு உள்பட 900 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களிடம் இருந்து  ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவர் மீதும், ஆந்திர மாநிலம் மற்றும் தர்மபுரி, கடத்தூர், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய போலீஸ் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த நாமக்கல், கரூர் மாவட்ட போலீசார் ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து கைதான இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story