ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்
x
தினத்தந்தி 21 Nov 2021 2:30 AM IST (Updated: 21 Nov 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் குளித்த போது குழித்துறை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்னவென்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குழித்துறை:
நண்பர்களுடன் குளித்த போது குழித்துறை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்னவென்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நண்பர்களுடன் குளித்தார்
களியக்காவிளை அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் நிதின் (வயது 19). பிளஸ்-2 முடித்த இவர் ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
நேற்று காலையில் நிதின் தனது நண்பர்கள் 4 பேருடன் பயிற்சியை முடித்ததும் அருகில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் 5 பேரும் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்
அப்போது திடீரென ஆற்று வெள்ளம் நிதினை இழுத்து சென்றது. உடனே அவருடன் குளித்த நண்பர்கள் நிதினை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 
தங்கள் கண்முன்னே நண்பர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை பார்த்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உறவினர்கள் சோகம்
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பைபர் படகு மூலம் சென்று தேடினார்கள். ஆனால் நிதினை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனாலும் நிதினின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனை அறிந்த நிதினின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் குளித்த போது வாலிபரை ஆற்று வெள்ளம் இழுத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story