காவேரிப்பட்டணம் அருகே ரூ.25 லட்சம் கேட்டு விபசார புரோக்கர் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது


காவேரிப்பட்டணம் அருகே ரூ.25 லட்சம் கேட்டு விபசார புரோக்கர் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2021 2:35 AM IST (Updated: 21 Nov 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே ரூ.25 லட்சம் கேட்டு விபசார புரோக்கர் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது

காவேரிப்பட்டணம்:
காேவரிப்பட்டணம் அருகே ரூ.25 லட்சம் கேட்டு விபசார புரோக்கர் உள்பட 2 பேரை காரில் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விபசார புரோக்கர்
மேற்கு வங்க மாநிலம் பரகானா சவுகத் ஜிங்கிசாட் பகுதியை சேர்ந்தவர் சவுகத் கான். இவரது மகன் ஷாரூக்கான் (வயது 24). இவர் கோவை பீளமேடு முருகன் கோவில் தெரு சக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்த ஆசைதம்பியின் மகன் சபரிநாதன் (21) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஷாரூக்கானிடம் வேலை செய்து வந்தார். வெளியூர்களில் இருந்து விபசார அழகிகளை அழைத்து வருவது, வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவது, வாடிக்கையாளர்களுக்கு விபசார அழகிகள் குறித்த தகவல்களை தெரிவிப்பது உள்ளிட்ட வேலைகளை சபரிநாதன் செய்து வந்தார். இதற்காக ஷாரூக்கான், சபரிநாதனுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்து வந்தார்.
வாய்த்தகராறு-தாக்குதல்
இந்த நிலையில் சபரிநாதன் தனக்கு கூடுதலாக சம்பளம் தர வேண்டும் என்று ஷாரூக்கானிடம் கேட்டார். இதனால் ஷாரூக்கான் மற்றும் சபரிநாதன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சபரிநாதன் ஷாரூக்கானை தாக்கினார். 
மேலும் ஷாரூக்கான் இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து சபரிநாதனை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சபரிநாதன் ஷாரூக்கானை பழி வாங்க திட்டமிட்டார்.
காரில் கடத்தல்
அதன்படி கடந்த 13-ந் தேதி திருப்பூரில் சிக்கன்னா காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த ஷாரூக்கானையும், அவரது தம்பி 17 வயது சிறுவனையும் சபரிநாதன் தரப்பினர் காரில் வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்கள், ஷாரூக்கானையும், அவரது தம்பியையும் காரில் கடத்தி சென்றனர். 
அவர்கள் காரில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாளமடுவு கிராமம் அருகில் வந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரை அருகில் வைத்து அண்ணன், தம்பியை தாக்கினார்கள். மேலும் அங்குள்ள குடிசையில் அவர்களை அடைத்து வைத்தனர்.
ரூ.25 லட்சம்
பின்னர் ஷாரூக்கானின் மனைவி மோனிஷா கானுக்கு சபரிநாதன் போன் செய்தார். உனது கணவரையும், அவரது தம்பியையும் நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ.25 லட்சம் கொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டு விடுகிறோம். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று அவர் மிரட்டினார். அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என்று கூறிய மோனிஷா, தன்னிடம் ரூ.55 ஆயிரம் இருப்பதாக கூறினார். 
அந்த பணத்தை திருப்பூரில் உள்ள தனது நண்பர் அபிஷேக்கிடம் கொடுக்குமாறு சபரிநாதன் கூறினார். அதன்படி மோனிஷா ரூ.55 ஆயிரத்தை அபிஷேக்கிடம் கொடுத்தார். இதனிடையே நேற்று முன்தினம் கடத்தல்காரர்களிடம் இருந்து ஷாரூக்கானும், அவரது தம்பியும் தப்பினார்கள்.
4 பேர் கைது
பின்னர் இதுகுறித்து ஷாரூக்கான் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். சபரிநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பேக்கரி ஊழியர் அஜய் பரத் (23), தனியார் நிறுவன ஊழியர் மோகனகுமார் (24), ஓசூர் ராயக்கோட்டை சாலை பிரம்மா நகரை சேர்ந்த ராஜ்குமார் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள திருச்சி துறையூரை சேர்ந்த அரவிந்தன், தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை சேர்ந்த ஆனந்தன், பாரூர் கீழ்குப்பம் அபிஷேக்,  பனங்காட்டூரை சேர்ந்த கார் டிரைவர் சக்தி ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்கள் 8 பேர் மீதும் தாக்குதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
காவேரிப்பட்டணம் அருகே ரூ.25 லட்சம் கேட்டு விபசார புரோக்கர், அவரது தம்பி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story