தர்மபுரியில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: 1,127 பயனாளிகளுக்கு ரூ.6.99 கோடி கடனுதவி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரியில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: 1,127 பயனாளிகளுக்கு ரூ.6.99 கோடி கடனுதவி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1,127 பயனாளிகளுக்கு ரூ.6.99 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
கூட்டுறவு வார விழா
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் மாவட்ட அளவிலான 68-வது கூட்டுறவு வார விழா தர்மபுரி-கடகத்தூர் கூட்டுரோடு லட்சுமி நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் வரவேற்று பேசினார்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசிக்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பரிசுகளையும், 1,127 பயனாளிகளுக்கு ரூ.6.99 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
தனி நிதிநிலை அறிக்கை
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மக்களின் நலனுக்காக நித்தம் நித்தம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை துறையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும். தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளை பசுமையாக மாற்றுவதற்கு காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரியாக வரும் நீரை விவசாயம் செய்ய ஏதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வெங்கடாஜலம், வர்த்தகர் அணி மாநில துணைச்செயலாளர் தர்மசெல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்கள் சங்கர், ரகமத்துல்லாகான், வேளாண்மை இணை இயக்குனர் வசுந்த ரேகா, துணை பதிவாளர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், சரவணன், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story