தேர்தலுக்காக வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது; ஈரோடு கோர்ட்டில் ஆஜரான சீமான் பேட்டி
தேர்தலுக்காக வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ஈரோடு கோர்ட்டில் ஆஜரான சீமான் கூறிஉள்ளார்.
ஈரோடு
தேர்தலுக்காக வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ஈரோடு கோர்ட்டில் ஆஜரான சீமான் கூறிஉள்ளார்.
கோர்ட்டில் ஆஜர்
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் பேசினார்கள். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசியதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு முதலாம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஆஜராவதற்காக சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் நேற்று ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் 3 பேரும் மாஜிஸ்திரேட்டு வடிவேல் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
வேளாண் சட்டங்கள்
கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியில் வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக வேளாண்மை சட்டங்கள் திரும்ப பெறப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 500 ஆண்டுகளானாலும் வேளாண்மை சட்டத்தில் உள்ள எழுத்துகளில் ஒரு கமாவை கூட மாற்ற மாட்டோம், இது காங்கிரஸ் ஆட்சியல்ல, நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம், இது பா.ஜ.க. அரசு என்று கூறி உள்ளார்.
இப்போது ஏன் பயப்பட வேண்டும். அதற்கு காரணம், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று உள்ளார்கள். அந்த மாநிலத்தில் தேர்தலை எதிர் கொள்வதற்காக வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
ஆன்லைன் வகுப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது ஒரு நாடகம். வன பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏற்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. வேளாண் சட்டத்தைவிட வன பாதுகாப்பு சட்டம் மிகவும் கொடியது. அணுக்கழிவை புதைக்க கர்நாடகா மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து விட்டனர். நமது இடிந்தகரையில் அணுக்கழிவு புதைக்கப்பட உள்ளதை ஏற்க உள்ளோமா? அல்லது எதிர்க்க உள்ளோமா? என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. எனவே ஆன்லைன் முறையிலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
ஈரோடு கோர்ட்டில் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஆஜராக வந்ததால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story