சேலத்தில் கூட்டுறவு வாரவிழா: 2,082 பயனாளிகளுக்கு ரூ.15¼ கோடி கடனுதவி


சேலத்தில் கூட்டுறவு வாரவிழா: 2,082 பயனாளிகளுக்கு ரூ.15¼ கோடி கடனுதவி
x
தினத்தந்தி 21 Nov 2021 2:47 AM IST (Updated: 21 Nov 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 2,082 பயனாளிகளுக்கு ரூ.15¼ கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

சேலம்:
சேலத்தில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 2,082 பயனாளிகளுக்கு ரூ.15¼ கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
கூட்டுறவு வாரவிழா
சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் 68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். 
எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்), பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடனுதவி
இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 1,514 விவசாயிகளுக்கு ரூ.12.05 கோடி பயிர்க்கடனும், 103 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.44 லட்சம் கடனுதவியும், 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.42 கோடி கடனுதவியும், 13 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி வீட்டு வசதி கடனுதவியும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சம் மகளிர் சிறு வணிக கடனுதவி உள்பட மொத்தம் 2,082 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 32 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர் மலர்விழி மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வட்டியில்லா பயிர்க்கடன்கள்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு அச்சகம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு நகர வங்கிகள் உள்ளிட்ட 361 வகையான கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மண்டலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை நபர் ஜாமீன் பேரிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021-2022-ம் ஆண்டில் இதுவரை 24 ஆயிரத்து 552 விவசாயிகளுக்கு ரூ.164.56 கோடி பயிர்க்கடனும், 3,096 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.20.23 கோடி பயிர்க்கடனும், 3,174 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.17.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தரமான உரங்கள் குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தொழில் தொடங்க
விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன்களான சிறு பால்பண்ணை அமைத்தல், கிணறு தூர்வாருதல், நாட்டுக்கோழி வளர்ப்பு, கறவை மாடு, ஆடு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டுவருகிறது. 
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கி சேவை செய்தமைக்காக மாநில அளவில் முதல் பரிசினை தமிழக அரசிடம் இருந்து பெற்று வந்துள்ளது. கடன் வழங்குவதில் மாநில அளவில் முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story