திருட்டு போன ரூ.7 லட்சம் செல்போன்கள் மீட்பு
தென்காசி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டன.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக மாவட்ட சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் சூப்பிரண்டு சுவாமிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பகப்பிரியா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை மீட்டனர்.
இந்த செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தென்காசியை அடுத்த கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு, உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் செல்போன்களை தவறவிட்ட பொதுமக்களுக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி பேசினார். அத்துடன் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story