நாகர்கோவிலில் வெற்றிப்பேரணி நடத்திய காங்கிரசார்


நாகர்கோவிலில் வெற்றிப்பேரணி  நடத்திய காங்கிரசார்
x
தினத்தந்தி 21 Nov 2021 3:13 AM IST (Updated: 21 Nov 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் திருத்த சட்டங்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் காங்கிரசார் வெற்றி பேரணியை நடத்தினர். இதில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றார்.

நாகர்கோவில்:
வேளாண் திருத்த சட்டங்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் காங்கிரசார் வெற்றி பேரணியை நடத்தினர். இதில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றார்.
காங்கிரசார் வெற்றி பேரணி
வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகளும் வரவேற்றுள்ளனர். இதனை பல்வேறு இடங்களில் விவசாயிகளும், காங்கிரசாரும் வெற்றி விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற்றதை வரவேற்கும் விதமாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவிலில் வெற்றி பேரணி நடந்தது.
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியானது வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் தொடங்கி அங்குள்ள குஞ்சன் நாடார் சிலை வரை சென்றது. அங்கு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு விஜய்வசந்த் எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்:-
மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. தற்போது மத்திய அரசு இந்த வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது.
இது விவசாயிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மேலும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. மக்களை பாதிக்கும் எந்தஒரு திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் பேசினார். பேரணியில் நிர்வாகிகள் மகேஷ் லாசர், சீனிவாசன், காலபெருமாள், முருகேசன், சபிதா, நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நேற்று மாலை நடந்தது. நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணை தலைவர் மகேஷ் லாசர், ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வருடமாக நடந்த போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனவே அவர்களது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என்றார்.

Next Story