சென்னையில் இருந்து அசாம் செல்ல வந்தவர்: விமான நிலையத்தில் பயணி திடீர் சாவு


சென்னையில் இருந்து அசாம் செல்ல வந்தவர்: விமான நிலையத்தில் பயணி திடீர் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2021 1:45 PM IST (Updated: 21 Nov 2021 1:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து அசாம் செல்ல வந்த பயணி, விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் தீபக் பால் (வயது 34). அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தார். விமானத்தில் பயணம் செய்ய காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு திடீரென உடல் வலிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த தீபக் பால், நேற்று அதிகாலை அசாமுக்கு செல்ல மீண்டும் விமான நிலையம் வந்தார்.

அப்போது அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள கழிவறை அருகே சென்றபோது திடீரென தீபக் பால் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அவரது உடல் கவனிப்பாறின்றி மழையில் நனைந்தபடி கிடந்தது.

அதன்பிறகு கழிவறை அருகே வந்த தொழிலாளிகள், தீபக் பால் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய போலீசார் விரைந்து வந்து தீபக் பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story