கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு
கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவிட்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்று சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை கட்டி இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மீனாட்சி நகர் பகுதி மக்கள் மழை பாதிப்புகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள். இதையடுத்து அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பட்ட இடத்தை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் சென்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் இதே நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story