சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 83 சதவீதம் நீர் இருப்பு: பூண்டி ஏரிக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீரும் திறப்பு


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 83 சதவீதம் நீர் இருப்பு: பூண்டி ஏரிக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீரும் திறப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 2:51 PM IST (Updated: 21 Nov 2021 2:51 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 83 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது.

ஊத்துக்கோட்டை, 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம், அம்மப்பள்ளி அணையில் இருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ள மழை நீர் பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக பூண்டி ஏரிக்கு வருகிறது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 953 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதாவது, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 34.41 அடி இருப்பு உள்ளது. அதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 833 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

அதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 715 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 855 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் 91.40 சதவீதமும், சோழவரத்தில் 77.06 சதவீதமும், புழல் ஏரியில் 82.27 சதவீதமும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 78.33 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வரும் 29 ஆயிரத்து 719 அதாவது 30 ஆயிரம் கன அடி முழுவதும் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை புறநகரில் உள்ள அனைத்து ஏரிகளிலும் 83.83 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 10 ஆயிரத்து 823 மில்லியன் கன அடி (10.82 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. ஏரிகளில் நீர் நிரம்புவதற்கு ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு மற்றும் திறக்கப்படும் நீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு சேமிக்கப்பட்டு இருப்பதால் சென்னை மாநகருக்கு வழக்கத்தை விட கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 750 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 965 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 500 முதல் 600 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, மழை நீருடன் சேர்ந்து கூடுதலாக கழிவு நீரும் வருவதால் தினசரி 737 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story