‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
படுமோசமான சாலை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் முதல் கேளம்பாக்கம் சாலையில் மேலக்கொடியூர் எல் கிராமத்தில் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. சாலை முழுவதும் அபாய குழிகளாக உள்ளன. இந்த சாலையில் பயணிக்கும்போது சாகச பயணம் செய்வது போன்று உள்ளது. மேலும் சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் குளம் போன்று காட்சி அளிக்கிறது. எனவே இந்த சாலையை ரப்பீஸ் கொண்டு சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
-கார்த்திக், மேலக்கொடியூர்.
கொசுத்தொல்லை தாங்க முடியல...
சென்னை வில்லிவாக்கம் பாபா நகர் 2-வது தெருவில் கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. குழந்தைகள், முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கொசுவை ஒழிக்க மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் தினமும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- மரிய உஷா, வில்லிவாக்கம்.
சாலையில் தேங்கிய சகதியால் அவதி
சென்னையில் பெய்த மழையால் பல சாலைகள் சேதம் அடைந்துள்ளன. பல சாலைகள் சகதிகளால் சூழப்பட்டுள்ளன. அதன்படி புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள லட்சுமி கோவில் பஸ் நிறுத்தம் டி.எச். சாலையோரம் சகதியாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடக் கூடாது. எனவே சாலையோரம் தேங்கி உள்ள சகதியை உடனடியாக அகற்ற வேண்டும்.
- வாகன ஓட்டிகள்.
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
பல்லாவரம் நகராட்சி அஸ்தினாபுரம் ஹர்ஜீனன் காலனி தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கழிவுநீர் பிரச்சினையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும்.
- பொதுமக்கள், ஹர்ஜீனன் காலனி.
சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல் நிலை ஊராட்சி அடங்கியுள்ள தாண்டவராயன்பாளையம் பஸ்நிறுத்தம் பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து உள்ளது. மேற்கூரையில் விரிசல்கள் விட்டுள்ளன. எனவே வருங்காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிடும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமூக ஆர்வலர் லோகேஸ்வர ராவ்.
கழிவுநீர் பிரச்சினையால் அவதி
சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகர் கூட்டுறவு சங்க காலனியில் தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் சேர்ந்து வடியாமல் இருக்கிறது. இதற்கு கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புதான் காரணம். கழிவுநீர் அடைப்பு குறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் பயனில்லை. தெருவில் நடக்க முடியாத அளவுக்கு கழிவுநீர் சூழ்ந்துள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
-விக்னேஷ்வரன், விருகம்பாக்கம்.
மக்களை பீதியாக்கும் பாம்புகள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் திர்த்தகிரயம் பட்டு பஞ்சாயத்து டீச்சர்ஸ் மாடர்ன் டவுன் பகுதியில் வடகரை சமூகநல பள்ளிக்கூடம் பின்புறம் அமைந்துள்ள பகுதியில் கொடிய விஷத் தன்மை கொண்ட பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மனிதர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
-எம்.கே.மூர்த்தி, வடகரை.
ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
செங்குன்றம் காந்தி நகர் 12-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல் முனையில் மின்சார வயர்கள் செல்லும் இடத்தின் நடுவே சிமெண்டு பூச்சிகள் முழுவதும் பெயர்ந்து உள்ளது. அங்கு காங்கீரிட் கம்பிகள் மட்டும் தெரிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பலமாக காற்று வீசினால் இந்த மின்கம்பம் தாக்கு முடியாமல் சரிந்து விடும். எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுவராஜ், காந்தி நகர்.
கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பெருகி வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. எனவே கழிவுநீர் கட்டமைப்பு வசதிகளை விரிவுப்படுத்தி கழிவுநீர் அடைப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் விசயத்தில் தனி கவனம் செலுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
-பொதுமக்கள், ஆதனூர்.
மின் இணைப்பு பெட்டி மூடப்படுமா?
சென்னை வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி முதல் தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்தநிலையில் உள்ளது. மழை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நேரிட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே கதவு இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டிக்கு கதவு அமைத்து மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
- பொதுமக்கள், வில்லிவாக்கம்.
Related Tags :
Next Story