பழுதடைந்த அறையில் தங்கும் போலீசார்
பூலக்குண்டு சோதனைச்சாவடியில் போலீசார் பழுதடைந்த அறையில் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பந்தலூர்
பூலக்குண்டு சோதனைச்சாவடியில் போலீசார் பழுதடைந்த அறையில் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் இருந்து பூலக்குண்டு வழியாக வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக சட்டவிரோதமாக மணல், ரேஷன் அரிசி, மரக்கட்டைகள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒரே சிறிய அறையில் இருந்து போலீசாரும், வனத்துறையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இடிந்து விழும் நிலை
தற்போது அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது இல்லை. இதனால் அதிரடிப்படை உள்ளிட்ட பிரிவை சேர்ந்த போலீசார் மட்டும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் கடத்தல், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் ஆகியவற்றை தடுக்க 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் அவர்கள் இருக்கும் சிறிய அறையில் போதிய இடவசதி இ்ல்லை. மேலும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் விரிப்புகளால் பந்தல் போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய கட்டிடம்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
சோதனைச்சாவடியில் பணியாற்றும் போலீசார் பழுதடைந்த சிறிய அறையில் தங்குகின்றனர். அதற்குள்ளேயே சமையல் செய்கின்றனர். அதற்குள்ளேயே சுழற்சி முறையில் ஓய்வு எடுக்கின்றனர். ஆனால் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போதிய அளவில் இ்ல்லை.
இதனால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தவிர அந்த அறைக்கு அருகில் அபாயகரமான மரங்களும் வளர்ந்து உள்ளன. பலத்த மழை பெய்யும் சமயத்தில் அவை சரிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story