கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் அதிரடி கைது


கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 21 Nov 2021 7:11 PM IST (Updated: 21 Nov 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஊட்டி

ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ள ரூபாய் நோட்டுகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள லோயர் பஜாரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபானம் வாங்க இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை ஒரு நபர் கொடுத்தார். ஆனால் அது கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் ஊழியர்கள் மது வழங்க மறுத்தனர். 

மேலும் காலதாமதம் ஏற்பட்டதால் அவர்களுடன் மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. இதை அந்த வழியாக வந்த ஊட்டி கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி பார்த்தார். தொடர்ந்து அங்கு சென்ற அவர் அந்த பணத்தை வாங்கி பரிசோதித்தார். அப்போது அது கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது உறுதியானது. உடனே அவர் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

விடுதியில் சோதனை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கோவை ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த தீனதயாளன்(வயது 32) என்பவர் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபானம் வாங்க முயன்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2,500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர் பாண்டிச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(25) என்பவருடன் ஊட்டி அருகே உள்ள தலைகுந்தாவில் ஒரு விடுதியில் தங்கி இருந்து ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. உடனே ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு மேலும் 1,500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கோபிநாத்தையும் போலீசார் பிடித்தனர். 

3 பேர் அதிரடி கைது

தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் காந்தல் குருசடி காலனியை சேர்ந்த அப்துல் ரகுமான்(28) என்பவர் கோவையில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வரவழைத்ததும், அந்த நோட்டுகளை புழக்கத்தில் விட தீனதயாளன், கோபிநாத் ஆகிய 2 பேரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. உடனே போலீசார் அப்துல் ரகுமானின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து 23 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தீனதயாளன், கோபிநாத், அப்துல் ரகுமான் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து, அவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 51(அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள்) கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய ராதாகிருஷ் ணன் என்பவரை தேடி வருகின்றனர். 

மேலும் ஊட்டியில் எந்தெந்த கடைகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர், கோவையில் யாரிடம் இருந்து கள்ள நோட்டுகள் பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story