கொள்ளிடம் ஆற்றில் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி


கொள்ளிடம் ஆற்றில் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி
x
தினத்தந்தி 21 Nov 2021 9:37 PM IST (Updated: 21 Nov 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

கொள்ளிடம்:
மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
150 ஆடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டுப்பகுதி உள்ளது. நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது55). இவருடைய மனைவி காந்திமதி(50). இவர்கள் 150 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். 
இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் பட்டி அமைத்து, அங்கு அடைத்து வைத்திருந்தனர். இவர்கள் பகலில் பட்டியில் இருந்து ஆடுகளை மேய்ச்சலுக்காக திறந்து விடுவார்கள். மாலையில் மீண்டும் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு தங்களுக்கு சொந்தமான படகின் மூலம் வீட்டிற்கு வருவது வழக்கம். 
ஆற்றில் சிக்கி தவித்தனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மற்றும் காந்திமதியும் படகில் கொள்ளிடம் திட்டில் பட்டியில் உள்ள தங்களது ஆடுகளை பார்க்க சென்றனர். 
அப்போது தொடர் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கணேசன், காந்திமதியும் 150 ஆடுகளுடன் கொள்ளிடம் ஆற்று திட்டில் சிக்கி கொண்டு கரைக்கு வரமுடியாமல் தவித்தனர்.
படகுகள் மூலம் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் உத்தரவின் பேரில் தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகுகளில் அங்கு சென்றனர். பின்னர் கொள்ளிடம் ஆற்று திட்டில் சிக்கி தவித்த கணேசன், காந்திமதி மற்றும் 150 ஆடுகளையும் 4 மணி நேரம் போராடி 4 பைபர் படகுகள் மூலம் கரைக்கு மீட்டு வந்தனர். 
மேலும் அதே கொள்ளிடம் ஆற்று திட்டு பகுதியில் சிக்கி தவித்த 3 பசுமாடுகளையும் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

Next Story