தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு: திருப்பாச்சனூர் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது போக்குவரத்து துண்டிப்பு; 10 கிராம மக்கள் கடும் அவதி
தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது திருப்பாச்சனூர் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்த 10 கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம்,
வெள்ளப்பெருக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டிய தொடர்மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் விளை நிலங்களுக்கும், கிராம குடியுருப்புகளுக்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒரு சில தரைப்பாலங்களும் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்ததால் ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்களில் மழைவெள்ளம் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும்
இந்த நிலையில் விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனூர்-தளவானூர் இடையே செல்லும் மலட்டாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, அந்த பாலம் தண்ணீர் அடித்துச் செல்லப் பட்டது. இதனால் தரைப்பாலம் முழுமையாக சேதமடைந்து, உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று கிடக்கிறது. இதனால் தளவானூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வர முடியாமல் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அந்த கிராமபுற மக்கள் மாற்று வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி நகர்புறங்களுக்கு பெரும் சிரமங்களுக்கு இடையே சென்று வருவதோடு, சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story