உளுந்தூர்பேட்டை பகுதியில் கொட்டித்தீர்த்த மழை
உளுந்தூர்பேட்டை பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் வடிய ஆரம்பித்தது. நேற்று காலை கடும் வெயில் சுட்டெரித்தது.
பின்னர் திடீரென மதியம் 1 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். 3 மணி நேரத்தில் சுமார் 52 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story